×

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி.. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை மகுடம் சூட்டினார் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்..!!

வாஷிங்டன்: நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் ஆன யு.எஸ். ஓபன் பட்டத்தை ஸ்பெயினை சேர்ந்த 19 வயது வீரர் கார்லஸ் அல்காரஸ் கைப்பற்றி அசத்தியுள்ளார். அத்துடன் நம்பர் 1 என்ற அந்ததஸ்தையும் பெற்று ரசிகர்களை ஈர்த்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் 2 வார காலமாக நடைபெற்று வந்தது யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர். இதில் ஆடவர் பட்டத்துக்கான போட்டியில் நார்வே நாட்டின் கேஸ்பர் ரூட்டுடன் பல பரீட்சை நடத்தினார் அல்காரஸ். இருவரும் இளமையானவர்கள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. வழக்கமான பேஸ் லைன் ஆட்டத்திற்கு மாறாக இருவரும் சர்வ் அண்ட் வாலே அடிப்படையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். முடிவில் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற கணக்கில் ரூட்டின் சவாலை முறியடித்து அல்காரஸ் சாம்பியன் ஆனார். இதனால் மைதானத்தில் வீழ்ந்து உணர்ச்சி பெருக்கில் மூழ்கிய அல்காரஸ் கேலரியில் இருந்த தனது அணியினர் மற்றும் உறவினர்களை சந்திக்க ஆவலுடன் ஏறிக் குதித்து முன்னேறியது பலரையும் நெகிழ வைத்தது. இந்த வெற்றியின் மூலம் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரர் என அந்ததஸ்தையும் அல்காரஸ் பெற்றுள்ளார். ஏடிபி தரவரிசை தொடங்கி 1973ம் ஆண்டுக்கு பிறகு நம்பர் 1 அந்ததஸ்தை பெற்ற இளம் வயது வீரர் என்ற பெருமையும் அல்காரஸுக்கு கிடைத்துள்ளது. இவருக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லேடின் கூவிட் 20 வயதில் இந்த சிறப்பை 2001ம் ஆண்டில் பெற்றார். அல்காரஸிடம் தோற்றுப்போன கேஸ்பர் ரூட் நம்பர் 2 வீரர் ஆகியுள்ளார். இதுகுறித்து அல்காரஸ் பேசியபோது, இளமையில் நான் கண்ட கனவில் ஒன்று நிறைவேறியதில் மகிழ்ச்சி. நபர் ஒன் வீரராகவும் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஆகவும் உயர்ந்துள்ளேன். இதற்காக மிக மிக கடினமாக உழைத்தேன். வென்றதும் உணர்ச்சிப் பெருக்கை என்னால் அடக்க முடியவில்லை. 19 வயது தான் எனக்கு ஆகிறது. ஆதலால் பெற்றோர் மற்றும் எனது குழுவினர் இன்றி இந்த சிறப்பை நான் சாதித்திருக்க முடியாது. என்னை பொறுத்தவரை மிகவும் சிறப்பானது இந்த சாம்பியன் பட்டம் எனக் கூறினார்.  …

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி.. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை மகுடம் சூட்டினார் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : U.S. Open Tennis Tournament ,Carlos Algarz ,Washington ,Grand Slam ,US ,Spain ,US Open Tennis Tournament ,Dinakaran ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...